Friday, May 15, 2009

Nothing much to say

சில காலமாகவே தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் எப்படியாவது சோம்பேறித்தனத்திடம் தோற்றுவிடுவேன். ஒரு சில நாட்கள் வண்டியில் செல்லும் போது மனதிற்குள்ளாகவே பதிவை எழுதி, அதை பிரசுரித்து திருப்தி பட்டுக்கொள்வேன். (இந்த பதிவை எழுதும்போது கூட மூன்று முறை என் கணினி சதி செய்தது)

பணிமாற்றம் காரணமாக பெங்களூரில் வசித்து வருகிறேன். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே பயணிக்கும் நாடோடி வாழ்க்கை. இருந்தாலும் பெரிதாக குறைபட்டுக்கொள்வதற்கு இல்லை.

சென்னையில் இருந்து பிரிந்து வந்த இந்த ஓராண்டு, என் மனதில் வெகு காலத்திற்கு நினைவில் இருக்கும்படி பல சம்பவங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றுக்குமே ஒரு பதிவு எழுத வேண்டும். ஆனால் என் சோம்பேறித்தனம் மீண்டும் எப்போது வெல்லும் என்று தெரியாததால், அவற்றை பற்றி சுருக்கமாக எழுதுகிறேன்.

நீண்ட நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த புல்லட் மோட்டார் வாகனத்தை வாங்கி, ஓட்டி, அனுபவித்து, பூரித்து வருகிறேன். இதை எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். ஏனென்றால் பணமும் வலிமையும் இருந்தும் கூட பலருக்கு புல்லட் ஓட்டும் இன்பம் கிடைப்பதில்லை. ஹர்ரி பாட்டர் கதையில் எப்படி மந்திரக்கோல் தான் தன் எஜமானனை தேர்ந்தேடுக்குமோ, அதே போல் புல்லட் வாகனம் கூட தான் சேரும் இடத்தை தானே தேர்ந்தெடுத்து கொள்கிறதோ என்று அடிக்கடி எண்ணிக்கொள்வேன் .ஒரு சில சமயம் வண்டியை ஓட்டும் போது மனம் லேசாகி விடுவதை உணர்வேன். அந்த உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முற்படுகையில் அமரர் கல்கியின் கதைகளில் படித்த "புலங்காகிதம்" என்னும் சொல் நினைவுக்கு வருகிறது.

அடுத்து நான் சொல்ல வேண்டியது என் புது அலுவலகத்தை பற்றி.என்னை விட வயதில் சிறியவர் பெரியவர் அனைவருமே என்னை விட திறமைசாலிகளாக இருப்பதை உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் அவர்களின் அறிவு கூர்மையை கண்டு வியக்கிறேன். எத்தனை முயற்சி செய்தாலும் புத்திசாலித்தனத்தை பெருக்கிக்கொள்ள முடியாது போல தோன்றுகிறது. மான் கூட்டத்தில் முயல் போல, அவர்களுடன் சரி சமமாக ஓட முடிவதில்லை. இருப்பினும் சில சமயங்களில் யாராவது என்னை முதுகில் தூக்கி செல்கின்றனர். ஒரு சில நாட்கள், "நாள் ஒன்றுக்கு நான் வாங்கும் சம்பளம் பொருமான அளவு இன்று வேலை செய்தேனா ?" என்று என்னையே கேட்டுக் கொள்வேன். இது மாதிரி எல்லாம் எனக்கு இதற்கு முன்னால் தோன்றியதே இல்லை.

பெங்களூர் எனக்கு பிடித்திருக்கிறது. அதற்கு தட்பவெட்ப நிலை மட்டும் காரணம் அல்ல. சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் எவ்வளவு அழகாக இருந்து இருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. கன்னடம் கற்று கொள்ள வேண்டும் என்று ஆசை, ஆனால் நான் வசிக்கும் இடத்தில் பெரும்பாலானோர் தமிழே பேசுவதால் கன்னடம் கற்றுக்கொள்ள அவ்வளவாக வாய்ப்பு கிடைப்பதில்லை. இருப்பினும் ஆட்டோ ஒட்டுனர்களிடமும், யாரிடமாவது வழி கேட்கும் போதும் எனக்கு தெரிந்த அரை குறை கன்னடத்தில் தான் பேசுகின்றேன். தப்புத்தப்பாக கன்னடம் பேசி அசிங்கபடுவது கூட சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

இப்போதெல்லாம் இரயில் பயணம், ஒரு சாதரணமான விஷயம் ஆகிவிட்டது. இரயில் வந்து நின்றதுமே ஏறி படுத்து விடுகிறேன். முன்பதிவு பட்டியலில் என் பெயர் இருக்கிறதா, நான் செல்லும் பெட்டியில் இளவயது பெண்கள் யாராவது கூட பயணிக்கிறார்களா என்று கல்லூரி காலத்தில் பார்த்தது எல்லாம், ஏதோ கி.மு.வில் நடந்தது போல் இருக்கிறது. என்னை போல் பெங்களூரில் வீட்டை பிரிந்து வாழும் ஆண்களும் பெண்களும் சென்னைக்கு வாராவாரம் அழுக்கு துணி மூட்டையை கொண்டு வந்து துவைத்து எடுத்து செல்வதை பார்க்கிறேன். இது என்ன கலாச்சாரமோ ? தங்கள் தேவைகளுக்காக சென்னையில் இருக்கும் வேலைக்காரியையும், இயந்திரத்தையும் எதிர்பார்பதோடு, அதை பெருமையாக வேறு பேசிக்கொள்ளும் மக்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வகையில் என் பெற்றோரை எண்ணி கர்வ படுகிறேன். இருபத்தேழு வயது வரை வீட்டிலேயே இருந்தபோதும் கூட தனியாக யார் தயவும் எதிர்பார்க்காமல் வாழும் அளவுக்கு, என்னை ஆளாக்கியிருக்கிறார்கள்.

சுஜாதாவின் நூல்களை சில ஆண்டுகளாக படித்து வருவதாலும் (ஒரு நாவலை படிக்க எனக்கு மூன்று மாதங்கள் வரை ஆகும்), கீர்த்திவாசனின் வலைப்பதிவை படிப்பதாலும் தமிழில் தொடர்ந்து எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

பொறுத்திருந்து பார்க்கிறேன்...

1 Comments:

Blogger Peelamedu_bulls said...

கலக்கிடே மச்சி .....

11:09 AM  

Post a Comment

<< Home

Blogarama - The Blog Directory Personal Blogs by Indian Bloggers